குறிப்பு:- இது நகைச்சுவைப் பதிவோ, எதிர்வினைப் பதிவோ அல்ல.
தூய தமிழில் எழுதுவது தமிழுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் நமக்கோ, நாம் சொல்ல வந்த கருத்துகளுக்கோ, நம் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கோ நன்மை பயப்பதாகாது.
ஏனெனில், தமிழரெல்லாம் தமிழறிந்தவரல்லர் என்ற ஒரு அவல நிலை நிலவுகிறது. அது காலத்தின் கோலமேயன்றி யாரும் விரும்பிச் செய்த செயல் அல்ல.
இன்று இந்தியாவில் பயிற்றுவிக்கப் படுவது 'மெக்காலே' என்ற ஆங்கிலேயர் பரிந்துரைத்த கல்வி முறை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
மேலும், பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் எடுக்கப்படும் மதிப்பெண்கள்தான் ஒரு மாணவனின் எதிர்காலத்தை, அதாவது அவன் மேற்கொண்டு படிக்க வேண்டிய கல்விக்கான தகுதியை நிர்ணயிக்கிறது.
ஐந்து அல்லது ஆறு பாடங்களில் ஒன்று மொழிப்பாடம். தமிழை முதல் மொழியாக எடுத்துப் படிப்பவர்களால் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற முடிவதில்லை. ஆனால் பிரெஞ்சு, சமஸ்கிருதம் ஆகியவற்றை மொழிப்பாடமாக தேர்ந்தெடுப்போர் நூறு சதவீத மதிப்பெண்களை இந்தப் பாடத்தில் பெற்று விடுகின்றனர். இது எப்படியென்பது குறித்த ஆய்வும் இதை மாற்றத் தேவையான நடவடிக்கைகள் குறித்த அலசலும் தனிப் பதிவிற்கானவை.
இ ந் நிலையில் தமிழில் பயிலுபவர்களும், தமிழை ஒரு பாடமாகப் பயிலுபவர்களும் மதிப்பெண்களுக்காகவே படிக்கிறார்கள் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
ஆகவே, தமிழர்களுக்கு இயற்கையாகவே தூய தமிழ் மீதான பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் தமிழின் சுவையையோ, தமிழில் உள்ள இலக்கியக் களஞ்சியங்களின் இனிமையையோ சுவைக்க முடிவதில்லை.
இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு செல்வந்தனின் இல்லத்தில் பெருமளவில் நகைகள் இருக்கின்றன. அவனுக்கு அவைஅரிய பொருட்கள் என்று தெரிகிறது. ஆனால் அவற்றை எடுத்து அணியவோ, அவற்றின் நுணுக்கங்களைக் கண்டு வியக்கவோ, தன் மகன் / மகளுக்கு அவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கவோ இயலாமல் போய் விடுகிறது.
என்னே ஒரு கையறு நிலை! இதுதான் இன்றைய தமிழர்களின் தமிழ்ச்செல்வம் குறித்த நிலையும். இவற்றை நாம் இன்று சரிசெய்யாமல் போனால் நாளை தமிழும் வாழா மொழியாகிவிடும்.
=====
இத்தகைய சூழலில், தூய தமிழில் எழுதுவது, தற்கொலைக்கொப்பான செயல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனெனில் நாம் எழுதுவது யாருக்கும் புரியாத போது அதன் பயனென்ன? தீமைகள்தான் அதிகம். இந்தப் பதிவிலே கூட சில வார்த்தைகள் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
ஆனால் அதற்காகத் தீந்தமிழ் அமுதத்தை அப்படியே விட்டு விடலாமா? கூடாது. கூடவே கூடாது.
இந்த அடிப்படையில் என் சிறு முயற்சியாக, வழக்குத்தமிழில் இலக்கியத் தமிழ் அமுதத்தைப் பருகத் தர முயற்சிக்கிறேன்.
இங்கே வழக்குத் தமிழென்பது வட்டாரத் தமிழாகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீந்தமிழைக் கற்க ஒரு சில வழிகள்:-
1. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சங்க இலக்கியங்களை முடிந்த வரையில் தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. புரிகிறதோ இல்லையோ, அவற்றை வாசிக்கப் பழகுங்கள்.
3. அவற்றில் உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளைத் தேடுங்கள்.
4. அதன் மூலம் அந்த இலக்கியத்தின் கருத்தை உணர முயலுங்கள்.
முயன்றால் முடியாதது ஏதுமில்லை.
3 comments:
மிகவும் அருமையாக அடிப்படை விசயங்களை விளக்கி கொண்டு வருகிறீர்கள்.
இலக்கிய தமிழ் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல!!!
Good Start.. Pls continue
Post a Comment