Wednesday, October 27, 2010

தூய தமிழில் எழுதுவதால் ஏற்படும் தீமைகள்

குறிப்பு:- இது நகைச்சுவைப் பதிவோ, எதிர்வினைப் பதிவோ அல்ல.

தூய தமிழில் எழுதுவது தமிழுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் நமக்கோ, நாம் சொல்ல வந்த கருத்துகளுக்கோ, நம் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கோ நன்மை பயப்பதாகாது.

ஏனெனில், தமிழரெல்லாம் தமிழறிந்தவரல்லர் என்ற ஒரு அவல நிலை நிலவுகிறது. அது காலத்தின் கோலமேயன்றி யாரும் விரும்பிச் செய்த செயல் அல்ல.

இன்று இந்தியாவில் பயிற்றுவிக்கப் படுவது 'மெக்காலே' என்ற ஆங்கிலேயர் பரிந்துரைத்த கல்வி முறை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும், பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் எடுக்கப்படும் மதிப்பெண்கள்தான் ஒரு மாணவனின் எதிர்காலத்தை, அதாவது அவன் மேற்கொண்டு படிக்க வேண்டிய கல்விக்கான தகுதியை நிர்ணயிக்கிறது.

ஐந்து அல்லது ஆறு பாடங்களில் ஒன்று மொழிப்பாடம். தமிழை முதல் மொழியாக எடுத்துப் படிப்பவர்களால் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற முடிவதில்லை. ஆனால் பிரெஞ்சு, சமஸ்கிருதம் ஆகியவற்றை மொழிப்பாடமாக தேர்ந்தெடுப்போர் நூறு சதவீத மதிப்பெண்களை இந்தப் பாடத்தில் பெற்று விடுகின்றனர். இது எப்படியென்பது குறித்த ஆய்வும் இதை மாற்றத் தேவையான நடவடிக்கைகள் குறித்த அலசலும் தனிப் பதிவிற்கானவை.

இ ந் நிலையில் தமிழில் பயிலுபவர்களும், தமிழை ஒரு பாடமாகப் பயிலுபவர்களும் மதிப்பெண்களுக்காகவே படிக்கிறார்கள் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஆகவே, தமிழர்களுக்கு இயற்கையாகவே தூய தமிழ் மீதான பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் தமிழின் சுவையையோ, தமிழில் உள்ள இலக்கியக் களஞ்சியங்களின் இனிமையையோ சுவைக்க முடிவதில்லை.

இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு செல்வந்தனின் இல்லத்தில் பெருமளவில் நகைகள் இருக்கின்றன. அவனுக்கு அவைஅரிய பொருட்கள் என்று தெரிகிறது. ஆனால் அவற்றை எடுத்து அணியவோ, அவற்றின் நுணுக்கங்களைக் கண்டு வியக்கவோ, தன் மகன் / மகளுக்கு அவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கவோ இயலாமல் போய் விடுகிறது.

என்னே ஒரு கையறு நிலை! இதுதான் இன்றைய தமிழர்களின் தமிழ்ச்செல்வம் குறித்த நிலையும். இவற்றை நாம் இன்று சரிசெய்யாமல் போனால் நாளை தமிழும் வாழா மொழியாகிவிடும்.

=====

இத்தகைய சூழலில், தூய தமிழில் எழுதுவது, தற்கொலைக்கொப்பான செயல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனெனில் நாம் எழுதுவது யாருக்கும் புரியாத போது அதன் பயனென்ன? தீமைகள்தான் அதிகம். இந்தப் பதிவிலே கூட சில வார்த்தைகள் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.

ஆனால் அதற்காகத் தீந்தமிழ் அமுதத்தை அப்படியே விட்டு விடலாமா? கூடாது. கூடவே கூடாது.

இந்த அடிப்படையில் என் சிறு முயற்சியாக, வழக்குத்தமிழில் இலக்கியத் தமிழ் அமுதத்தைப் பருகத் தர முயற்சிக்கிறேன்.

இங்கே வழக்குத் தமிழென்பது வட்டாரத் தமிழாகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தீந்தமிழைக் கற்க ஒரு சில வழிகள்:-

1. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சங்க இலக்கியங்களை முடிந்த வரையில் தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.

2. புரிகிறதோ இல்லையோ, அவற்றை வாசிக்கப் பழகுங்கள்.

3. அவற்றில் உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளைத் தேடுங்கள்.

4. அதன் மூலம் அந்த இலக்கியத்தின் கருத்தை உணர முயலுங்கள்.

முயன்றால் முடியாதது ஏதுமில்லை.

Tuesday, October 19, 2010

தமிழில் எழுதுகிறேன் - யாரும் வராதீர்

தமிழ் வலையுலகத்திற்கு என் பெயர் புதியதாக இருக்கலாம். நான் புதியவனல்ல. இங்கு நடக்கும் நிகழ்வுகளும் இன்ன பிறவும் நான் நன்கறிவேன்.வலைஎழுத்து என்பது பொழுது போக்கு என்பதாகவும், குடுமிப்பிடி சண்டைகளுக்காகவும் ஆகிப் போன பின்னால் தூய தமிழில் எழுதி என்ன பயன்?

தமிழ் வலையுலகம் எப்போது அடுத்த கட்டத்திற்குத் தன்னை எடுத்துச் செல்லப் போகிறது? திரைமணம் என்று தனியாக நிறுவிய தமிழ்மணம், இலக்கியமணத்திற்கு புதுவீடு அமைத்துத் தருவது எப்போது?

நகைச்சுவை, அனுபவம், சினிமா, அரசியல், புனைவுகள், சமையல் என்ற பிரிவுகள் இருக்கும் போது இலக்கியத்தை யாருமே சீண்டிப் பார்ப்பதில்லையே?முன்பு சிலர் வெண்பா எழுத சொல்லித் தந்தனர். ஒருவர் சில சங்கப் பாடல்களிலிருந்து ஒப்புமை காட்டி கதைகள் சொல்லிவந்தார்.

பாரதியோ, வள்ளுவனோ வாழ்ந்த போது கிடைக்காத மரியாதை அவர்கள் மரித்த பின்புதானே அவர்கள் படைப்புகளுக்குக் கிடைத்தது?

ஆனால் இணையத்தில், தமிழிலக்கியமோ, கனியிருப்பக் காய்கவர்ந்ததைப் போல் இருக்கிறது.

அன்புத் தமிழ் நெஞ்சங்களே, தமிழின் தீஞ்சுவையை நீவிர் அறிய மாட்டீரோ? அதைப் பருகிக் களிகொள்ள உங்கள் உள்ளம் விரும்பாதோ?

இன்று வலிமையான ஊடகமாக விளங்குகின்ற திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் வட்டார வழக்கு மொழியே அதிக அளவில் பயன்படுத்தப் படுவதும், இலக்கியத் தமிழில் புத்தகங்கள் கூட வெளிவராமல் இருப்பதும் தமிழின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, வாழ்விற்கே உகந்ததல்ல.

ஆகவே, நான் எனது சிறு முயற்சியாக தமிழில் எழுதவே விழைகிறேன். 

Sunday, October 17, 2010

எந்திரன் - தமிழில் வந்த முதல் இங்கிலீஷ் படம்

கடந்த வாரத்தில் இரு முறை திரையரங்கிற்குச் சென்று எந்திரன் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை தேவி, பிறகு ஸ்வர்ணசக்தி அபிராமி (இரண்டு திரையரங்கிற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறதா?!)

படம் பார்த்த பெரும்பாலோர்க்கு இத்திரைப்படத்தின் முழு 'கண்டெண்ட்'டும் புரியவில்லை என்பது வருத்தமே. நிறைய 'டெக்னிகல்' விஷயங்களை விஷுவலாகக் காட்டியிருக்கிறார்கள். அதிகம் படித்தவர்களே அவற்றை படத்தின் வேகத்தில் ஸ்கிப் செய்திருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு 'எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்'ஐ எடுத்துக் கொள்வோம். எந்திரன் தீ விபத்தில் மாட்டிக்கொண்டவர்களை பறந்து பறந்து காப்பாற்றுவதாகக் காட்டுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் 'எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்' ஆக்டிவேட் செய்யப்படுகிறது. எலக்ட்ரோ மேக்னட் என்பது வெறும் இரும்பாக இருக்கும். மின்சாரம் செலுத்தப் பட்டவுடன் காந்தமாக மாறுகிறது. அந்த காந்தத்தை இரும்பை நோக்கிக் குவிக்கும் போது, இரும்பு வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லது அந்த இரும்பை நோக்கி, எந்திரன் ஈர்க்கப்படுகிறது. இதை சிறு அளவில் உரையாடலில் விளக்கியிருக்கலாம்.

அடுத்து, 'விஷுவல் ப்ளீச்'. எந்திரன்களை நோக்கி டாலடிக்கும் போது அது செயலற்றுப் போகிறது.

அடுத்து 'ஃபார்மேஷன் மோட்'. எலக்ட்ரோ மேக்னடிக் மோட் மூலமாக எந்திரன்கள் தங்களுக்குள்ளே பிரமிட், க்ளோப், சுவர், மனிதன், பாம்பு போன்ற வடிவங்களை எடுத்துக் கொள்ள முடியும். அதை எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்டை தாக்கப் பட்ட ரோபோ வாயிலாக செயலிழக்கச் செய்வதன் மூலம் உடைக்க முயல்கிறார் வசீகரன். இதன் பெயர் 'வார்மிங்'. ஆனால் எந்திரன் 'டீ-வார்மிங்' செய்து மீண்டும் 'ஃபார்மேஷன் மோட்'ஐ உருவாக்குகிறார். இறுதியில், 'கமாண்ட்' மோட் மூலம் 'டீ மாக்னடைஸ்' செய்து அனைத்து ரோபோக்களையும் 'டெஸ்ட்ராய்' செய்கிறார்.

இவ்வாறான நிறைய டெக்னிகல் விஷயங்களை ஓரளவிற்கு வசனம் மூலம் சொல்லியிருந்தால் நிறைய பேர் இந்தக் காட்சிகளை வெறும் கிராஃபிக்சாகவோ, கார்ட்டூனாகவோ இல்லாமல், சயின்ஸ் ஃபிக்ஷனாக ரசித்துப் பார்த்திருப்பார்கள்...

அதனால்தான் இந்த பதிவிற்கு டைட்டில் - தமிழில் வந்த இங்கிலீஷ் படம்!

விஜயதசமியன்று துவங்கினால் வெற்றியா?

விஜயதசமி என்பது இராமன் இராவணனை வென்ற நாள். அதாவது இராமனது போர் முடிவுக்கு வந்த நாள்.

ஆனால் இந்த நாளில் துவங்குவது அனைத்தும் துலங்கும் என்கிறார்களே ஏன் இந்த முரண்?

என்னைப் பொறுத்த வரை என்று துவங்கினாலும் அறுதியிட்ட நம்பிக்கையுடனும் திடசித்தத்துடனும் செயல்படுத்தும் செயல்கள் யாவும் வெற்றியடைபவையே.

எவ்வளவு கடுமையான செயலாக இருந்தாலும் அதைப் பற்றிய சிந்தனையோடே இருந்தால் தேவையான வழிகள் புலப்படும்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்..

Monday, October 11, 2010

தமிழ்த்தாய் வாழ்த்து...

காலங்கள் பல கடந்தும்..
கன்னியவள் கலைகளில்
குறைவில்லை..
எங்கள் தமிழ்த்தாயவள்
தயவாலே
தரணியெங்கும் எங்களுக்குத் தீமையில்லை.

தமிழால் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும்
தமிழ்த்தாயே..
எப்போதும் எமைக் காத்திட
நீ வருவாயே...


தமிழே போற்றி..
தாயே போற்றி..

அன்னை கலைவாணி

வெள்ளைத் தாமரையில்
வீற்றிருந்து எந்தன்
உள்ளக் கோவிலில்
உறைந்திருப்பாள்..
செல்வமும் வீரமும்
விளைந்திடவே..
எந்தன் சிந்தை
நிறைந்து மகிழ்ந்திருப்பாள்..

நான்முகன் நாயகியின்
நயனதரிசனம்
பெற்றவர் வாழ்வினில்
என்றும் வளம் மிகும்..

கலைவாணியே...
எங்கள் குலதேவியே..
உந்தன் திருப்பாதம்
சரணம் சரணம்...

காத்து அருள்புரிவாய்
இது தருணம் தருணம்..

முதன் முதலாக

அய்ந்து கரத்தனை
ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை
போலும் எயிற்றனை

 நந்தி மகன் தனை
ஞானக் கொழுந்தனை
புத்தியில் வைத்தடி
போற்றுகின்றேனே..

மூலகணபதியின் தாளே சரணம்...